நம்பிக்கையும் சளந்தரியமும்மகிழ்ச்சியும் துளிர்விடும் டிசெம்பர் 31
December 2018


எழுத்து: சுகந்தி சங்கர்


டிசெம்பர் 31 நள்ளிரவில், புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டிவிடுகின்றன. தேவாலயங்கள், கோவில்கள், விகாரைகளில் வழிபாடுகளிலும் பொதுஇடங்களில் வானவேடிக்கைகள், களியாட்டநிகழ்ச்சிகளிலும் விடுதிகளில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களிலும் மக்கள் மகிழ்ந்திருக்க, இனிதே புத்தாண்டு பிறக்கும்...


டிசெம்பர் - 31, ஆங்கிலப் புத்தாண்டின் அதாவது, கிரகெறி ஆண்டின் இறுதி நாள்; புத்தாண்டுக்கு முதல் நாள்; பழைய வருடம்; வருடத்தின் கடைசி தினத்தில், கடந்துவந்த வருடத்துக்கு நன்றி செலுத்தி, புதுவருடத்தைக் குதூகலமாக வரவேற்கும் நாளும்பொழுதுமாக அமைகிறது.


டிசெம்பர் 31 இரவு, புத்தாண்டை வரவேற்கும் பொழுதுகளாகக் கொள்வதால் உலகெங்கும் உற்சாகமும் புத்துணர்ச்சியும் மிகுந்து மகிழ்ச்சியில் தளைத்திருக்கும். இனம், மதம், நாடு போன்ற பேதங்களையும் எல்லைகளையும் கடந்து, புத்தாண்டு இராத்திரி, உலகத்தை ஒரே நேர்கோட்டில் இணைக்கிறது.


இலங்கை மக்களுக்கே உரித்தான சிறப்பான குணவியல்புகளில் ஒன்று, நன்றி மறக்காமை. டிசெம்பர் 31 ஆம் திகதி கூட, ஆண்டின் இறுதி தினத்தில், அந்த ஆண்டின் நிகழ்ந்த நன்மையான காரியங்கள், பெற்றுக்கொண்ட அனுகூலங்கள், போன்ற எல்லாவற்றுக்கும் நன்றி செலுத்துவதுபோல், பழைய வருடத்தைச் சிறப்பிக்கும் சம்பிரதாயம் இலங்கையின் கிராமங்களில் காணப்படுகின்றது. நகர்புறங்களின் வேகமான வாழ்க்கைச் சூழலுக்குள் பழைய வருட சம்பிரதாயங்கள் மறைந்துவிட்டாலும் கிராமங்களில் கிறிஸ்தவர்கள் மத்தியில் இன்னும் இந்தப் பாரம்பரியம் காணப்படுகின்றது. அன்றைய தினத்தில் நன்றித்திருப்பலியில் கலந்துகொள்வதுடன், ஏழைகளும் புதுவருடத்தைக் கொண்டாட்டத்துடன் வரவேற்கும் வண்ணம் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல், போன்ற நற்செயல்களில் ஈடுபடும் நாளாகவும் பேணி வருகிறார்கள்.


பொதுவாக, பழைய வருடத்தின் எண்ணக்கரு, கடந்து செல்லும் வருடத்துக்கு நன்றி செலுத்துவதுடன், பிறக்கும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்பதற்கான ஆயத்தங்களைச் செய்வதுடன் தானும் தான் சார்ந்த குடும்பமும் தனது சமூகமும் கிராமமும் புத்தாண்டைக் கவலைகள் இன்றி, நம்பிக்கைகளுடன் வரவேற்பதற்கு உதவுவதாகும்.


கோள்களின் நிலைமாற்றம், சந்திரன், சூரியன் ஆகியவற்றின் சுற்றுக்களைக் கணிப்பிட்டு, புதுவருடம் குறித்த நேரத்தில் பிறக்கின்றது என அறிவிக்கப்பட்டு, அந்த நேரத்தைப் புத்தாண்டு பிறக்கும் நேரமாகக் கொண்டு, புத்தாண்டை வரவேற்கும் பாரம்பரியம் அநேக வகையான வருடங்களில் காணப்படுகின்றன. ஆனால், ஆங்கிலப் புத்தாண்டு, டிசெம்பர் 31ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பிறப்பதாகக் கொள்ளப்பட்டு, கொண்டாடப்படுகிறது, வரவேற்கப்படுகின்றது. இந்த மரபில் எந்த மாற்றங்களும் இடம்பெறுவதில்லை.


இதை அடிப்படையாக வைத்தே, மாந்தர் தத்தமது நம்பிக்கைகள், எண்ணங்கள், விருப்பங்கள் போன்றவற்றின் அடிப்படையில், புத்தாண்டை டிசெம்பர் 31 நள்ளிரவில் வரவேற்றுக் கொண்டாடி மகிழ்கின்றனர்.


டிசெம்பர் 31 நள்ளிரவு, இரண்டு நிலைகளில் முக்கியத்துவம் பெறுகின்றது. முதலாவது, இது புதிய ஆண்டின் மணித்துளிகளின் ஆரம்பம். புதுவருடத்தை வரவேற்கும் கொட்டாட்டங்கள், குதூகலங்கள் களைகட்டும் பொழுதுகள்; புத்தாண்டு என்ற தலைநாளின் விடியலுக்கான வைகறை; புத்தாண்டு என்ற புதிய அரும்பிய மலரின் மொட்டு; புதிய ஆண்டு என்று எடுத்துக்கொண்டால், இந்த உலகில் புதியது எதுவும், புத்துணர்ச்சி, மலர்ச்சி, மகிழ்ச்சி, ஆலிங்கனம் போன்ற உணர்வுகளின் திரட்சியாக வெளிப்படுத்தும் சக்தி படைத்தது. இந்த உணர்வுகளின் உச்சபட்ச வெளிப்பாடுகளை, புதிய ஆண்டை வரவேற்கும் கொண்டாட்டங்களிலும் காணலாம்.


இரண்டாவதாக, கிறிஸ்தவ மத நம்பிக்கையின் அடிப்படையில் டிசெம்பர் 31 புனித சில்வெஸ்டார் தினமாகும். அன்றைய நள்ளிரவில் கிறிஸ்து பிறந்து, எட்டாவது நாள் ஆரம்பமாகின்றது. அன்று இயேசுவுக்கு விருத்தசேதனம் (பெயர்சூட்டுதல்) செய்யப்பட்ட தினம் என்ற சிறப்பும் பெறுகிறது.


கிறிஸ்தவ தேவாலயங்கள், புதுவருடத்தை வரவேற்கும் முகமாக டிசெம்பர் 31 நள்ளிரவில் ஆராதனைகளை பாரம்பரியமாகவும் மரபுநெறி மாறாமலும் நிகழ்த்தி வருகின்றன. தற்காலத்தில், வேறுமதங்களைச் சார்ந்தவர்களும் தத்தமது வழிபாட்டிடங்களில் புத்தாண்டை வரவேற்கும் முகமாக, டிசெம்பர் 31 நள்ளிரவிலோ அல்லது அதிகாலையிலோ, வழிபாடுகளை சீரும் சிறப்புடனும் நடத்தி வருகின்றன. குறிப்பாக, இந்துக் கோவில்களில் அதிகாலை வேளையில் புத்தாண்டு பூஜைகள் நடைபெறுகின்றன. விகாரைகளிலும் குறிப்பாக, கொழும்பு கங்காராமய விகாரையில் புத்தாண்டை வரவேற்கும் நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெறும். டிசெம்பர் 31 நள்ளிரவில், புதுவருடம் பிறக்கும் நேரத்தில், கங்காராமய வாவியில் வானவேடிக்கைகள் களைகட்டியிருக்கும். இங்கு புதுவருட தினத்தன்று பலவிசேட வழிபாட்டு நிகழ்வுகளும் நடைபெறுவதுடன் பிரதம விகாராதிபதியிடமிருந்து ஆசிகளையும் வாழ்த்துகளையும் பெற்றுக்கொள்வார்கள். இந்நிகழ்வுகளில் அதிகளவு உல்லாசப் பயணிகள் கலந்துகொண்டு மகிழ்ந்திருப்பார்கள்.


பலர் இவ்வாறு ஆத்மிக ரீதியில் புத்தாண்டை இறைவனுடன் இணைந்து வரவேற்க டிசெம்பர் 31ஐத் தேவாலயங்களிலும் மதவழிபாட்டிடங்களிலும் கூடியிருக்க இன்னும் சிலர், பிடித்த உறவுகளுடன் வீட்டில் விளக்கேற்றி, தூபமிட்டு, சிற்றுண்டிகள் பகிர்ந்துண்டு மகிழ்ச்சியாக நள்ளிரவு 12.00 மணியை எதிர்கொள்வர். புத்தாண்டு பிறக்கும் போது, குதூகலித்திருத்தல், மகிழ்ச்சியுடனிருத்தல், சமாதானத்துடனிருத்தல், நற்செயல்களில் ஈடுபட்டிருத்தல் போன்ற உணர்வுகள், செயல்களில் எண்ணம் இருக்கையில் புத்தாண்டு பிறந்தால், அந்த வருடம் முழுவதும் அதே உணர்வுகள் ஓங்கியிருக்கும் என்ற நம்பிக்கை, மக்கள் மத்தியில் ஆழமாகக் காணப்படுகின்றது.


சிலர் வாணவேடிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்வதும் பொதுஇடங்களில் ஒன்றுகூடி அத்தகைய பிரமாண்டமான வாணவேடிக்கைகளைப் பார்த்து மகிழ்வர். குறிப்பாக கொழும்பு காலிமுகத்திடலில் பிரமாண்டமான வானவேடிக்கைகள் நிகழ்த்தப்படுகின்றன. இங்கு பெருமளவில் கூடும் மக்கள், இவற்றைக் கண்டு களிப்பதுடன் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வார்கள்.


இன்னும் சிலர் விடுதிகளில் இடம்பெறும் புத்தாண்டை வரவேற்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்வார்கள். இந்நிகழ்வுகள் அனைத்தும் டிசெம்பர் 31 இரவு ஆரம்பமாகி புத்தாண்டு பிறப்பையடுத்தும் தொடர்ந்து குதூகலத்துடன் இடம்பெறும்.


இலங்கை உல்லாசப் பயணிகளைக் கவரும் நாடாகையால் இங்குள்ள விடுதிகள் அனைத்திலும் டிசெம்பர் 31 இரவு, புத்தாண்டை வரவேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுவதுண்டு.


இலங்கை, இயற்கை எளில்மிகுந்த உல்லாசப் பயணிகளைக் கவரும் நாடாக விளங்குவதால், டிசெம்பர் 31 நிகழ்வுகள், சிறப்பாகவும் இலங்கைக்கே உரிய உபசரிப்பு, விருந்தோம்பல், கலாசாரப் பாரம்பரியங்களுடன் சிறப்புற ஒவ்வோர் விடுதிகளிலும் ஒழுங்கு செய்யப்பட்டு இடம்பெறுகின்றன.


டிசெம்பர் 31 நள்ளிரவிலும் புத்தாண்டு தினத்தின்போதும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளும் வாழ்த்துகள், வளர்ச்சியையும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையையும் தருகின்றன. எனவே புத்தாண்டு வாழ்த்துக்கள் மூலம் நம்பிக்கையும் நன்மையும் சௌந்தரியமும் மகிழ்ச்சியும் துளிர்விடட்டும்.


New Year’s Eve (December 31) is a time to reflect on the year past and welcome the new year. Worldwide, dazzling fireworks begin towards midnight to celebrate the happiness and merriment felt in the air. Dancing and music are part of the festivities. Families and friends get together to usher in the new year and many visit religious places to receive blessings for a prosperous and peaceful new year. Colombo becomes a hive of festivities on 31st night with fireworks, music, dancing and delicious food.